இறைச்சியின முயல் வளர்ப்பு
இறைச்சிக்காகவும் தோல் மற்றும் உரோமத்திற்காகவும் முயல்களை வளர்ப்பது உலகின் பல்வேறு நாடுகளில் முக்கியத்துவம் பெற்று வருகின்றது. நமது நாட்டிலும் முயல் வளர்ப்பதற்கான சாத்தியமான அம்சங்கள் நிறைய உள்ளன. மக்கள்தொகைப் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப இறைச்சி உற்பத்தியை பெருக்கிட முயல் வளர்ப்பு மிகவும் ஏற்ற பண்ணைத் தொழிலாகும். முயல் கிராமப் புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் வளர்க்கலாம். இவ்வளவு சிறப்பம்சங்கள் இருந்தும் ஏன் பலரும் முயல் வளர்க்க முன்வருவதில்லை என்பதை ஆராய்ந்தால் கீழ்க்கண்ட காரணங்கள் தெரிகின்றன. · முயல்களை வீட்டில் வளர்க்கக் கூடாது என்ற தவறான கருத்து மக்களிடையே நிலவுகிறது. · முயல் வளர்த்தால் வீட்டில் சண்டை சச்சரவுகள் வரும் என்ற தவறான கருத்து.· முயலினை இறைச்சிக்காக வெட்ட அஞ்சுவது / பரிதாபப்படுவது. · முயல் பண்ணைத் தொடங்கிட போதுமான உதவிகள் கிட்டாமை. · விற்பனை வசதிகள் திறம்பட இல்லாத நிலை. · மானியத் திட்டங்கள் எதுவும் இல்லாத நிலை. மேற்கூறிய காரணங்கள் களையப்பட்டால் சிறப்பம்சங்கள் நிறைந்த முயல் வளர்ப்பு வெகு விரைவாக பிரபலம் அடையும். முயல் இனங்கள் மற்றும் சாதகமான சூழ்நிலை : ஐம்பதிற்கும் மேற்பட்ட முயல் இனங்கள் இருக்கின்றன. குறிப்பிட்டு சொல்லக்கூடிய இனங்கள் வெள்ளை ஜெயண்ட் சாம்பல் ஜெயண்ட் நியூசீலாந்து வெள்ளை மற்றும் அங்கோரா இனங்கள். இவற்றில் அங்கோரா இன முயல்களை உயர்தர உரோமத்திற்காக குளிர்ந்த மற்றும் மலைப் பிரதேசங்களில் வளர்க்கலாம். இறைச்சி முயல்களை மலைப் பிரதேசங்களிலும் சமவெளிப் பகுதிகளிலும் வளர்க்கலாம். தட்பவெப்பநிலை 36 ஊ வரைக்கும் இருக்கலாம். ஈரப்பதம் காற்றில் 70 சதவீதத்திற்கும் மேல் இருக்கக்கூடாது. அங்கோரா இன முயல்களை வெப்பம் குறைந்த (15-20 C) மலைப் பிரதேசங்களில் மட்டும் வளர்க்கச் சிறந்தது. முயல் இருப்பிடம் மற்றும் வளர்ப்பு :முயல்களை கூண்டுகளில் வளர்ப்பதே சிறந்தது. (ஆழ்கூள முறையிலும் வளர்க்கலாம்). மூலதனம் குறைவான மரக்கூண்டுகளிலும் வளர்க்கலாம். வளர்ந்த ஆண் முயலுக்கு (1.5 x 1.5 x 1.5') அளவுள்ள கூண்டும் பெண் முயலுக்கு (2.0 x 2.5 x 3.0') அளவுள்ள கூண்டும் ஏற்றது. இதில் தீவனம் மற்றும் தண்ணீர் கொடுப்பதற்கு சிறிய பாத்திரம் அல்லது கொள்கலன்களை கட்டிவிட வேண்டும். கூண்டுகளை தினந்தோறும் பிரஷ் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இரண்டு மாதத்திற்கு ஒரு முறை தீ உமிழி கொண்டு சுத்தம் செய்யலாம். முயல் சாணம் கூண்டுகளில் தங்காவண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.
முயல் மிகவும் சாதுவான பிராணியாதலால் பள்ளி சிறுவர்கள் பெண்கள்வயதானவர்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் வளர்க்க ஏதுவானது. முயல் வளர்க்க ஆரம்பிப்போர் முதலில் ஓர் ஆண் மற்றும் மூன்று பெண் முயல்கள் கொண்ட சிறு குழுவாக ஆரம்பிக்கலாம். முயல் வளர்ப்பில் உள்ள தொழில்நுட்பங்களை அறிந்த பின்னரே அதிக அளவில் முயல் வளர்க்க எண்ண வேண்டும். கொல்லைப் புறத்தில் வளர்க்க 1 ஆண் மற்றும் 3 பெண் முயல்கள் போதும். இதிலிருநது வாரந்தோறும் ஒரு கிலோ இறைச்சி கிடைக்கும். இது குடும்ப தேவைக்கு போதுமானது. கொல்லைப் புறத்தில் முயல் வளர்க்கும் சமையலறைக் கழிவுகள் மற்றும் பசுந்தீவனம் கொண்டே பராமரிக்கலாம்.
முயல் வளர்ப்பின் சிறப்பம்சம் ......
பசுந்தீவனத்தை சிறந்ததொரு இறைச்சியாக மாற்றுவதில் முயலுக்கு நிகர் வேறெதும் இல்லை. முயல் இறைச்சி மருத்துவ குணங்கள் கொண்டது. கொலஸ்ட்ரால் மிக மிகக் குறைவு. இருதய நோயாளிகளும் முதியோர்களும் ஏற்கக் கூடிய இறைச்சி. முயல்களுக்கு தடுப்பூசிகள் ஏதும் தேவையில்லை. குறைந்த சினைக்காலம் அதிக குட்டிகள் ஈனும் திறன் துரித வளர்ச்சி அதிக தீவன மாற்றுத்திறன் ஆகிய குணங்கள் குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்கள். நிச்சயம் லாபகரமான பண்ணைத் தொழில். ஆரம்பத்தில் சிறிய அளவில் பண்ணை அமைத்து நல்ல அனுபவம் பெற்ற பின்னர் பெரிய அளவில் தொடங்கலாம். ஒரு நபர் 500 முயல்கள் வரைக்கும் பராமரிக்க முடியும். முன்னேற்றம் தரும் சிறந்ததொரு பண்ணைத் தொழில் முயல் வளர்ப்பு