12

78

Home » » செம்மறி ஆடு வளர்ப்பு- மேய்ச்சல் முறை

செம்மறி ஆடு வளர்ப்பு- மேய்ச்சல் முறை

செம்மறி ஆடு வளர்ப்பு- மேய்ச்சல் முறை.


செழிப்பான விவசாயத்திற்கு கால்நடைகள் வரப்பிரசாதம். கால்நடைகள் என்றதுமே நம் நினைவுக்கு வருவது ஆடு, மாடு, கோழி, வாத்து… போன்றவைகளாகும். ஆடு வளர்ப்பில் பெரும்பாலான விவசாயிகள் வெள்ளாடுகளையே தேர்ந்தேடுத்து வளர்ப்பார்கள். செம்மறி ஆடுகளைப் பட்டி அடைத்து வளர்க்க வேண்டும், மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்ல வேண்டும் என்ற காரணங்களினால் செம்மறி ஆடுகள் பண்ணைகளில் வளர்ப்பது குறைவுதான்.

திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி மலையிலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் திருமூர்த்தி நகரில் உள்ளது திரு. சதீஸ் அவர்களின் தென்னந் தோப்பு. இவரின் பண்ணைக்குத் தேவையான உரத்தினை அளித்திடவே பட்டி அமைத்து செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். செம்மறி ஆடுகளை பராமரிக்கும் பணிக்கு, திரு. சண்முகம் அவர்கள் பண்ணையில் உள்ளார். இனி திரு. சண்முகம் அவர்கள் கூறியதை பார்ப்போம்…

சுமார் 10 வருடங்களாக, செம்மறி ஆடு வளர்ப்பு மற்றும் பராமரிப்புப் பணியில் உள்ளேன். இந்தப் பண்ணையில் நான் சேர்ந்து 5 வருடங்களாகிறது. இதற்கு முன்பு எங்கள் முதலாளி தென்னை மரங்களுக்குத் தேவையான உரங்களை வெளியில் இருந்து தான் வாங்கிப் பயன்படுத்தி வந்தார். நாளுக்கு நாள் உரத்தின் தேவை, மற்றும் விலை அதிகரித்துக் கொண்டு இருந்த போது, ஏன் நாமே பட்டி அமைத்து செம்மறி ஆடுகளை வளர்க்கக் கூடாது என்று தொடங்கினார்.

தமிழ்நாட்டில் சுமார் 10 வகையான செம்மறி ஆட்டினங்கள் உள்ளன. ஆரம்பத்தில் 30 ‘மயிலம்பாடி செம்மறி ஆடுகளை’ வாங்கி பட்டி அமைத்தோம். இன்று சுமார் 70 செம்மறி ஆடுகளாகப் பெருக்கி, பட்டியைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறாம். தென்னந் தோப்பில் வளர்ப்பதால் நாங்கள் எந்த ஒரு இரசாயன பொருட்களையும் பயன்படுத்துவதில்லை. சொட்டு நீர் அமைத்துள்ளதாலும் ஆடுகளை தோப்பில் மேய்த்து வருவதாலும் களைகள் அதிகமாக (புதர்போல்) முளைப்பதில்லை. மேய்ச்சலுக்குத் தென்னந்தோப்பைத் தவிர வெளியிலும் மேய்ச்சல் நிலங்களுக்கு ஓட்டிச் செல்வேன். மேய்ச்சல் நிலம் இல்லாதவர்கள் தங்கள் தேவைக்கேற்ப எண்ணிக்கையைத் தேர்வு செய்து கொள்ளலாம் என்ற அறிவுரையும் வழங்குகிறார்.

செம்மறி ஆடு
பட்டியில் 70 செம்மறி ஆடுகள் உள்ளன, இவைகளுக்கு 2 கிடா என்று பராமரித்து வருகிறோம். காலை சுமார் 11 மணியளவில் மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்று மாலை 6 மணிக்குத் திரும்புவோம் என்று தன் ஆடுகளுடன் இருக்கும் பிணைப்பை வெளிப்படுத்தினார். வளர்ந்த ஆடுகளுக்கு மேய்ச்சல் முறை மட்டுமே; கலப்புத் தீவனம் என்று எதுவும் கொடுப்பதில்லை. பெட்டை ஆடுகளே அதிகம் வளர்க்கிறோம், இவைகளால் பட்டியை வளர்க்கச் செய்யலாம். கிடாக்கள் அதிகமாக வளர்த்தால் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொள்கின்றன.

குட்டிகள்
செம்மறி ஆடு 14 மாதத்தில் இரண்டு முறை குட்டி ஈனும். மேய்ச்சல் முறையில் குட்டிகள் தொலைவிற்கு அழைத்துச் சென்றால் அவைகள் அசதியாகிவிடும். ஆகவே, குட்டி பிறந்த 50 நாட்களுக்கு மேய்ச்சலுக்கு விடுவதில்லை. பட்டியில் ஒன்றாக அடைத்து வைக்கப்பட்டுள்ள குட்டிகள், மேய்ச்சலுக்குச் செல்லும் போது குட்டிகள் தனியாக பிரிக்கப்பட்டு கொட்டகையில் அடைத்து, தீவனம் வழங்கப்படும். கோடை காலத்தில் 1 மாதத்திற்குப் பின்பும், குளிர்காலங்களில் 50 நாட்களுக்குப் பிறகும் மேய்ச்சலுக்கு விட வேண்டும். குட்டிகள் பிறந்து 1 மாதத்திற்குப் பிறகு – சோயா பொட்டு, பனிக் கடலைப் பொட்டு (கொண்டக் கடலை)… போன்றவைகளை 9 அங்குல உயரத்தில் தீவனத் தொட்டி அமைத்து கொடுத்திடுவேன். மேலும், தீவனமாக வேப்பந்தழை, சவுண்டல்… போன்றவைகளைக் கொட்டகைக்குள் கட்டித் தொங்க விட வேண்டும். இவ்வாறு செய்வதினால் குட்டிகள் நன்கு ஆரோக்கியமாக வளர்வதுடன் மேய்ச்சல் முறைக்குத் தயாராகிவிடும். ஆண்மை நீக்கம் செய்த கிடாக்குட்டிகள் நன்கு கொழுக்கும் மேலும் பெட்டை ஆடுகளுக்கும் தொல்லை கொடுக்காது. நன்றாக வளரும் குட்டிகளை ஆடுகளுக்குப் பதிலாக மந்தையில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

மேய்ச்சல் முறை
பண்ணைக்குள் மேய்ச்சல் முறையில், ஒரு எக்டேருக்கு சுமார் 10 ஆடுகள் வரை வளர்க்கலாம். காலநிலையைப் பொறுத்தே மேய்ச்சலின் நேரம் அமைகிறது என்கிறார். வெயில் காலங்களில் காலை 10 மணிக்கு மேய்ச்சலுக்குச் சென்று 5 மணிக்குத் திரும்புவோம். இதுவே, பனி பொழியும் மாதங்களில் காலை 11 மணிக்குத்தான் மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வேன் – காரணம் இந்த மாதங்களில் பொழியும் பனித் தண்ணீரை மேய்ந்தால் ஆடுகளுக்கு சளி பிடிக்கும் இதனால் நோய் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

மழைக் காலங்களில் ஆடுகளுக்குக் கொழுப்பு சேரக் கூடாது. இதைக் கணக்கில் கொண்டு மேய்ச்சலின் நேரத்தைக் குறைக்க வேண்டும். கொழுப்பு அதிகமானால் துள்ளு மாரி நோய் வரும். இது போன்ற காலங்களில் 7 மணி நேரம் மட்டுமே மேய்க்க வேண்டும்.
பராமரிப்பு
பனி மாதங்களிலும் மற்றும் மழைக் காலங்களில் (மழை பொழியும் நாட்களில்) கொட்டகையில் வைத்துப் பராமரித்து கொள்ள வேண்டும். மேலும், குடற்புழு நீக்கம் மூன்று மாதத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும்.

ஆடுகளுக்கு உடம்பு சரியில்லை என்றால் முடி சிலிர்த்து நிற்கும். சரி வர மேய்ச்சல் எடுக்காது போன்ற அறிகுறிகளை வைத்துக் கண்டறிய வேண்டும். மேலும், காது ஓரத்தில் தொட்டுப் பார்த்தால் ஜில் என்று இருக்கும் – இவை காய்ச்சலுக்கான அறிகுறிகள். செம்மறி ஆடுகளைப் பொருத்த வரையில் பராமரிப்பு என்பது மிக முக்கியம் என்கிறார்.

பயன்கள்
செம்மறி ஆடுகள், இறைச்சி, எரு, தோல், கம்பளி மற்றும் பால் வழங்குகின்றன. (ஆட்டுத்தோலில் வளரக்கூடிய உரோமங்களுக்குக் கம்பளம் என்று பெயர். கம்பளங்கள் புரோட்டினால் ஆனது. தீப்பற்றாமை மற்றும் ஈரம் உறிஞ்சாமை ஆகியவை இதன் சிறப்புத் தன்மைகளாகும்.)

நாங்கள் சற்றுக் கூடுதலாகத் தென்னந் தோப்பில் மேய்த்துப் பயனடைந்து வருகிறோம். செம்மறி ஆடுகள் மேயும் பொழுது குழம்புகளால் நிலத்தை ஏர் போன்று உழுது விடுகின்றன. அத்தோடு பிழுக்கைகளும் நிலத்தில் பரப்பி விடுகின்றன. தென்னந் தோப்பில் இடத்தை ஒவ்வொரு முறையும் மாற்றிப் பட்டி அடைக்கும் பொழுது, அதன் பிழுக்கை மற்றும் சிறுநீர் போன்றவைகள் நல்ல உரமாவதால் மரங்கள் நன்கு செழிப்புடன் வளர்வதுடன் காய்களும் நல்ல ருசியுடன் உள்ளதாக கூறுகிறார்.

தற்போது ஆட்டுப் பிழுக்கையின் சந்தை விலை 1 டின் (சுமார் 12-13 கிலோ) எடை ரூபாய்30/- என்று விற்கப்படுகிறது. எங்கள் பண்ணையின் ஆட்டுப் பிழுக்கைகள் விற்கப்படுவதில்லை என்றும் சொந்தப் பயன்பாட்டிற்கே வைத்துக் கொள்கிறோம் என்றார். கிடைபோடும் பொழுது நள்ளிரவில் ஆடுகளை எழுப்பி, பக்கத்திலேயே இடம் மாறி படுக்க வைக்க வேண்டும். சில நேரங்களில் இரண்டு அல்லது மூன்று முறை கூட ஆடுகளை மாற்றி அமைக்கலாம். இதனால் ஆடுகளின் ரோமம், பிழுக்கை, சிறுநீருடன் கலந்து நிலத்திற்கு உரமாகச் சேரும்.

அந்தக் காலங்களில் (இன்றும் சில இடங்களில்) பண்ணை நிலங்களில் வாடகைக்கு மந்தைக்கிடை போட்டு அதற்கான கட்டணத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள்.

விற்பனை மற்றும் கழித்தல் (திறனற்றவற்றைக் கழித்தல்)
இறைச்சி விற்பனைக்கு மூன்று மாதம் முதல் எட்டு மாத வயதுள்ள குட்டிகளை விற்கலாம். வியாபாரிகள் தேடி வந்து ஆடுகளை வாங்கிச் செல்கின்றனர், சில நேரங்களில் சந்தைக்கு எடுத்துச் செல்வதும் உண்டும். 5 கிலோ எடை உள்ள குட்டி சுமார் ரூபாய்2,200/-க்கு விற்கப்படும். வளர்ந்த மற்றும் நன்கு குட்டி ஈனும் ஆடுகளைப் பட்டியின் வளர்ச்சிக்கு வைத்துக் கொள்வோம். 2 முதல் 3 வருடங்களுக்கு ஒரு முறை வயது முதிர்ந்த ஆடுகளை விற்று விட்டு கிடாக்களை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை கழித்து, பட்டியில் இருந்து நன்கு திறன் பெற்ற கிடாவைத் தேர்வு செய்து வளர்ப்போம்.

நன்கு குட்டி ஈன்ற ஆடு, 5 வயது முதிர்வின் பின்னால் விற்கும் போது ரூபாய்2,000/- என்ற விலை மட்டுமே கிடைக்கும். இவைகள் விற்பனை என்பதை விட கழித்தல் என்றே சொல்ல வேண்டும் என்கிறார். ஆடுகளைக் கழிப்பது என்பது சரிவர மேயாத ஆடுகள், மற்ற ஆடுகளின் மீது முட்டும் இடிக்கும் ஆடுகள் – குட்டி, பெட்டை மற்றும் கிடாக்கள் எனப் பல்வேறு நிலைகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் பெட்டைகளில் சதைப்பற்று குறைவானவை, ஊனமானவை, ஓராண்டுக்கு ஒரு முறை கூட சினை பிடிக்காதவை போன்றவைகளைத் திறனற்றவை என்று கழித்திட வேண்டும்.

மேல்நாடுகளில்…
மேல்நாடுகளில் செம்மறி ஆடுகளை கொண்டு வேளாண் பண்ணைக்குள் மேய்த்து களைகளை அழித்து வருவது குறிப்பிடத்தக்கது. இங்கு களைகளை கட்டுப்படுத்துவதோடல்லாமல் இயந்திரப் பயன்பாட்டைக் குறைப்பதால் சுற்றுச்சூழலைப் புகையில்லாமல் பாதுகாக்கிறோம், களைகளை மேய்ந்து உரமாக மண்ணிற்கே கொடுப்பதால் மண்ணில் அங்ககத் தன்மை மேம்பட்டு சாகுபடிப் பயிர்களுக்குச் சத்தாகச் சென்றடைகிறது என்கின்றனர் மேல்நாட்டு இயற்கை விவசாயிகள். இதற்கு உதாரணமாக திராட்சை தோட்டங்களைச் சொல்லலாம்.

இந்தப் பண்ணைகளில் கலப்புத் தீவனங்களாக ஓட்ஸ், கோதுமை மற்றும் பார்லி போன்றவைகளை மழைக் காலங்களில் விதைத்து அறுவடை செய்து இதனுடன் வெளியில் இருந்து வாங்கிய குதிரை மசால் (இது அதிக புரத சத்துள்ளது) கலந்து மந்தைகளுக்கு வழங்கி, குறுகிய காலத்தில் வளர்த்து விற்று கூடுதல் வருமானம் பார்ப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேல்நாட்டு ஆடுகள் நம் நாட்டு ஆடுகளை விட 2 பங்கு இறைச்சியும் 10 பங்கு கம்பளியையும் அதிகமாக உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. இதற்குக் காரணம் தட்பவெட்ப நிலை முக்கிய பங்காற்றுகின்றது என்பதை ஆய்வில் கண்டிறிந்துள்ளனர்.

இனி கூடுதல் தகவல்கள்,
எத்தகைய வறட்சியையும், குளிரையும் தாங்கி வாழக் கூடிய ஆற்றல் பெற்றவை. உதாரணமாக: நீலகிரி மாவட்டம் சாந்திநல்லா ஆட்டினவிருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் வளர்க்கப்படுகிறது.

செம்மறி ஆடுகள் மந்தையாகக் கூடி வாழ விரும்புபவை. ஆகவே, அதிக எண்ணிக்கை கொண்ட மந்தையையும் ஓர் ஆள் மேய்த்து விட முடியும்.

செம்மறி ஆடுகள் சராசரியாக ஒரு நாளில் 9 முதல் 11 மணி நேரம் வரை மேயும்.

கலப்புத் தீவனங்கள் எதுவும் வழங்காமல், வெறும் மேய்ச்சலை மட்டுமே வைத்துக் கூட வளர்த்திட முடியும்.

பயிர் சாகுபடி நிலங்களில், பயிர்களுக்குத், தீங்கு விளைவிக்காமல் அருகு, கோரை… போன்ற களைச்செடிகளை மேய்ந்து விடும். இவைகளை உயிருள்ள களை எடுப்பான் என்றே சொல்லலாம். கடந்த ஆகஸ்ட் 2015 இதழில், சிந்தனை புதிதில், தெரிந்த ரகசியம் என்னும் தலைப்பில் கட்டுரை வெளி வந்தது குறிப்பிடத்தக்கது.

தண்ணீர்த் தொட்டிகள் – 10 அடி நீளமுள்ள தொட்டி 10 ஆடுகளுக்கு போதுமானதாகும். இத்தொட்டிகள் தரைமட்டத்திலிருந்து 9 அங்கல உயரத்தில் இருக்குமாறு அமைத்தல் வேண்டும்.

தீவனத் தொட்டி, தண்ணீர்த் தொட்டி ஆகியவற்றைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். நன்கு சுத்தம் செய்து வெயிலில் வைக்க வேண்டும்.

மேய்ச்சல் நிலம், மண்ணின் தன்மை இவற்றைப் பொறுத்தே ஆடுகளுக்கு ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது.

மேய்ச்சல் நிலத்தில் உள்ள புற்கள் முதிர்ச்சியடையும் போது அவற்றில் உள்ள புரதம் மற்றும் தாது உப்புக்களின் அளவு குறையும். ஆனால் நார்ச்சத்து அதிகரிக்கும்.

சினைக்காலத்தில் நன்கு ஊட்டச்சத்து அளிக்காமல் இருப்பதாலும் தாது உப்புக்கள் பற்றாக் குறையாலும். கருப்பைப் பிதுக்கம் ஏற்படுகின்றன. இதற்கு விரைவான சிகிச்சை அளிக்கத் தவறினால், ஆடு இறந்து விடும்.

தாது உப்புக் கட்டிகள் வாங்கி அதை ஒரு கயிற்றில் கட்டி பட்டியில் / கொட்டிலில் தொங்கவிட்டால் ஆடுகள் நக்கிச் சுவைத்து விழுங்கும். இதனால் தாதுச் சத்துக்கள் குறைபாடு நீங்கும்.

அதிக கவனம் தேவை
சேமித்து வைக்கப்படும் தீவனங்களில் எலி, பெருக்கான் போன்றவைகளின் கழிவு / எச்சம் கலப்பதன் மூலமும் நோய் பரவுகின்றது.

பட்டி அமைக்கும் இடங்களில் நீர்த் தேக்கம் இருந்தால் மீன் வளர்க்கலாம், இதனால் கொசு முட்டைகள் அழிக்கப்பட்டு நோய் பரவும் அபாயம் குறையும். அல்லது, நீர் நிலைகளின் மீது எண்ணெய் தெளித்தால் அது நீர் பரப்பின் மீது சமமாகப் பரவி மிதக்கும். இதனால் கொசுக்கள் மூச்சுத் திணறி இறந்து விடும்.
புதியதாக வாங்கிய ஆடுகளைப் பட்டியில் உடனே சேர்க்காமல், 45 நாட்கள் தனியாக வைத்துக் கவனிக்க வேண்டும். இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் தவிர்க்கப்படும்.

“ஆட்டு எரு அவ்வாண்டு; மாட்டு எரு மறு ஆண்டு” என்ற பழமொழியும் உண்டு. எந்த ஒரு வருமானம் தரும் தொழிலிலும் முதன்மைப் பொருளை விட உபபொருளில் கிடைக்கும் வருமானமே வெற்றியைத் தேடித் தரும். செம்மறி ஆடு வளர்ப்பு ‘பண்ணைக்குச் செல்வம்’

Share this article :

தாயக செய்திகள்

புதியவை

ஆடு வளர்ப்பு

மாடு வளர்ப்பு

யோகா

வாசனைப் பயிர்கள்

சேதனம்

ஒருங்கிணைந்த பண்ணை

 
Support : Copyright © 2017. Thentral: Tamil News Online, Breaking News. - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups