12

78

Home » , » எளிதான பயிர் சாகுபடிக்கு விதை உர கட்டு தொழில்நுட்பம்

எளிதான பயிர் சாகுபடிக்கு விதை உர கட்டு தொழில்நுட்பம்

இன்றைய காலகட்டத்தில் அதிக விளைச்சல் தரும் பயிர்களை பயிரிடும்போது அதிக அளவு ஊட்டச்சத்து தரும் உரங்களை அளிக்க வேண்டியுள்ளது .மண்ணின் மேற்பரப்பில் உரங்களைத் துவுவதால் பயிர்களின் வளர்ச்சி அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் களைச் செடிகளின் வளர்ச்சியும் பயிர்களைப் பாதிக்கும் வண்ணம் அதிகரிக்கின்றது. 
பயிர் செய்யும் பொழுது உரச்சத்துகளின் பயன்பாட்டுத்திறனை அதிகரிக்க ஆழமாகக் குழி பறித்து இடும் முறைகள் சிறந்தவையாகும். இம்முறைகளைக் கையாள போதிய பணியாளர்களும், போதிய கருவிகளும் கிடைக்காததால் உழவர்கள் இவற்றை கடைபிடிப்பதில்லை. மேலும் உழவர்களுக்கு பயிர் விளைவிப்பதற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கொண்ட உரங்கள், விதைகள், களைக்கொல்லிகள், பணியாளர்கள் ஆகிய அனைத்தும் ஒரே சமயத்தில், ஒரே இடத்தில் கிடைப்பதில்லை. இக்காரணங்களால் விளைச்சலை பெருமளவு அதிகரிக்க முடிவதில்லை. 
இந்த நிலையில் ஊட்டங்களின் பயன்பாட்டுத் திறனை அதிகரிக்க உழவர்கள் பயன் பெறும் பொருட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்திலுள்ள மண்ணியல் மற்றும் வேளாண் வேதியல் துறையினர் ஒரு புதுமையான விதை உர கட்டு என்கின்ற தொழில் நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். இந்த விதை உர கட்டுகளைத் தொழிற்கூடங்களில் உற்பத்தி செய்து உழவர்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்ய புதுடெல்லியிலுள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மற்றும் சென்னையிலுள்ள தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் உடன் இணைந்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இயற்கை வள மேலாண்மை இயக்குனரகத்தில் இயங்கி வரும் மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறையில் இயந்திரங்கள் மூலம் விதை உர கட்டு தயாரிக்கும் திட்டத்தை 2011- 14 ஆண்டில் ரூ 30.91 இலட்சம் செலவில் செயல்படுத்தியுள்ளது.
விதை உரைக்கட்டு மூன்று பாகங்களை உள்ளடக்கியது. மேல்நோக்கி இருப்பது நேர்த்தி செய்யப்பட்ட விதை, மத்தியில் இருப்பது ஊட்டமேற்றிய எரு வில்லை, அடிப்பகுயில் இருப்பது சமச்சீர் உர வில்லை இவை எளிதில் மக்கக்கூடிய பேப்பர் கொண்டு கற்றப்பட்டுள்ளது. கடைசியில் இந்த மூன்றையும் ஒன்றாக இணைத்து செய்தித்தாள் கொண்டு சுற்றி அதன் நுனிப்பகுதி பசையினால் ஓட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் பயிரின் விதைகளை மண்ணில் ஊன்றும் போதே விதைக்கு அடியில் அல்லது பக்கத்தில் செரிவூட்டப்பட்ட எரு, உரங்கள் பதிக்கப்படுகின்றன. சத்துக்கள் தினந்தோறும் கொஞ்சம் கொஞ்சமாக வேர்ப் பகுதியில் வெளிப்படுவதால் பயிரின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகின்றது. சத்து இழப்புகளும் குறைகின்றது. விதை உர கட்டில் பயன்தரும் நுண்ணுயிரிகள், நுண்னூட்டங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளும் சேர்க்கப்படுள்ளன. ஒருவிரல் அளவுள்ள ஒவ்வொரு விதை உர கட்டையும் மண்ணில் செங்குத்தாகவோ அல்லது கிடைமட்டமாகவோ பதிக்க வேண்டும். பயிர்க் காலத்திற்கு முன்பே விதை உர கட்டுகளைத் தயாரித்து வைத்துக் கொள்ளலாம். அதிக அளவில் விதை உர கட்டுகளைத் தயாரிக்க இயந்திரங்களைப் பயன்படுத்தும் போது அதன் தயாரிப்பு செலவு மிகவும் குறைகின்றது.
இந்தியாவில் ஒவ்வொரு உழவரின் சராசரி நில அளவு 2 எக்டர் ஆகும். பெரும்பாலான உழவர்கள் மழைக்காலத்திலோ அல்லது அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடும் சமயத்திலோ பயிர் செய்ய ஆரம்பிக்கின்றனர். தற்போதைய காலக்கட்டத்தில் பெருமளவு பெருகிவரும் பணியாளர்கள் பற்றாக்குறையினால், ஒரே நேரத்தில் சரியான பயிர் பருவத் தருணங்களில் விதைக்கவும், எருவிடவும், சமச்சீர் உரங்களை அளிக்கவும் முடியாமல் உழவர்கள் அவதிப்படுகின்றனர. பயிர் உற்பத்தியில் இரசாயன உரங்களின் செலவினம் அதிகமாக உள்ளது. திறன் வாய்ந்த முறையில் இராசாயன உரங்களைப் பயன்படுத்துவது மிகவும் அவசியம்.

நீண்ட காலமாக உழவர்கள் இரசாயன உரங்களைப் பயிருக்கு ஏற்றாற்போல் பகுதிகளாக பிரித்து மண்ணின் மேற்பரப்பில் மனவழி ஊட்டமாக அளித்து வருகிறார்கள். இதற்கு மாற்றாக, உர பயன்பாட்டை அதிகரிக்க மண்ணின் அடிப்பகுதியில் வேருக்கு அருகில் உரமிடும் எளிய முறையான விதை உர கட்டு தொழில் நுட்பம் உழவர்கள் கடைபிடிப்பதற்கு ஏதுவாக இருக்கும்.
விதை ஊன்றுவதற்கு பதிலாக விதை உர கட்டுகளை பதிய வைக்கும் போது விதையுடன், பயிர் சாகுபடிக்கு தேவையான எரு, இரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகள் ஆகியவைகள் பயிர் காலம் முழுவதும் கிடைப்பதால் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கும். மண்ணின் மேற்பரப்பில் உரமிடுவதை தவிர்த்து விதை உர கட்டு தொழில் நுட்பத்தை பயன்படுத்தியதால் விளைச்சல் 10 முதல் 30 சதம் வரை தானிய   மற்றும் தோட்டக்கலை பயிர்களில் அதிகரித்துள்ளது. விதை உர கட்டு தொழில்நுட்பத்தை எளிதில் கடைப்பிடிக்க உள்ள ஒரே வழி தொழில் கூடங்களில் விதை உர கட்டுக்களைத் தயாரித்து, பின் பயிர் விளைவிக்கும் பருவம் தொடங்கும் போது உழவர்களுக்கு அளிப்பது தான். கிராமங்களில் சிறுதொழில் கூடங்களில் பல்வேறுபட்ட இயந்திரங்களைக் கொண்டு விதை உர கட்டுகளைத் தயாரித்து போதுமான அளவில் உழவர்களுக்கு அளிக்க முடியும். இயந்திரங்கள் மூலம் விதை உர கட்டு தயாரிப்பதால் ஆண்டு முழுவதும் நல்ல வருமானத்தையும், வேலை வாய்ப்புகளையும் பெற முடியும்.
Share this article :

தாயக செய்திகள்

புதியவை

ஆடு வளர்ப்பு

மாடு வளர்ப்பு

யோகா

வாசனைப் பயிர்கள்

சேதனம்

ஒருங்கிணைந்த பண்ணை

 
Support : Copyright © 2017. Thentral: Tamil News Online, Breaking News. - All Rights Reserved
Site Designed by Creating Website Inspired Support
Proudly powered by SunGroups